டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அம்பேத்கர் குறித்த கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், பாஜக எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டார். கீழே விழுந்து காயம் அடைந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களை சந்தித்து, “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் ராகுல் காந்தி இருந்தார். அருகில் இருந்த எம்.பி.யை ராகுல் காந்தி தள்ளினார். அந்த எம்பி என் மீது விழுந்தார். அதனால்தான் படியில் இருந்து கீழே விழுந்தேன். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் சார்பில் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ராகுல் காந்தி மீது வேண்டுமென்றே காயப்படுத்துதல், கொலை முயற்சி, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளிகளை பயன்படுத்துதல், குற்றம் செய்யும் நோக்கத்தில் இருப்பது உள்ளிட்ட கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் எழுந்துள்ளது. பா.ஜ., கொடுத்த புகாரை ஏற்று விசாரித்த பார்லிமென்ட் தெரு போலீசார், கொலை முயற்சி பிரிவு தவிர்த்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பாஜக ஒரு பக்கம் புகார் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காங்கிரஸ் எம்பிக்கள் நுழைய முயன்றபோது, பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, எங்கள் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைத் தள்ளினார்கள். இதில் மல்லிகார்ஜுன் கார்கேவின் காலில் அடிபட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் பாஜக மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.