டெல்லி: ஒரே நாடு, ஒரே நேரத்திற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்டி முறையில் ஒரே நேரத்தை பின்பற்றுவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே சட்டம் என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரே நேரத்தை துல்லியமாக பதிவு செய்யும் விதமாக ஐஎஸ்டி நேரத்தை அனைத்து இடங்களிலும் சீராக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து ஐஎஸ்டி நேரத்தை, துல்லியப்படுத்துவதற்கான நடைமுறை குறித்து ஆய்வு செய்து வந்தது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தை பதிவு செய்வதற்கான வரைவு விதிகளை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் வணிக தளங்களிலும் இந்திய தரநிலை நேரமான ஐஎஸ்டி நேரம் மட்டுமே நேர குறியீடாக பயன்படுத்தப்படும். குறிப்பாக வணிகம், போக்குவரத்து, சட்ட ஒப்பந்தம், பொது நிர்வாகம் மற்றும் நிதி செயல்பாடுகள் போன்ற துறைகளில் ஐஎஸ்டி நேரத்தை பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் ஐஎஸ்டி நேரத்தை முக்கியமாக காட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உள்கட்டமைப்புகளில் ஒரே நேரத்தை துல்லியமாக காட்டுவதை கட்டாயமாக்க இந்த நடவடிக்கை உதவும்.