மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். மகாராஷ்டிராவில் இன்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து துணை முதல்வராக பதவியேற்க ஏக்நாத் ஷிண்டே ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும், மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றாலும், அங்கு முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியை மேற்பார்வையாளர்களாக பாஜக தலைமை நியமித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்வரும், சில முக்கிய இலாகாக்களும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.