மும்பை: பாலிவுட் பிரபலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மும்பை பாந்த்ராவில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் பலமுறை குத்தியுள்ளான். இதில், 6 இடங்களில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தி சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், இயக்குனர் ரோமியோ மற்றும் பாடகி மற்றும் நடிகை சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மிரட்டலில், “உங்கள் சமீபத்திய செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இது விளம்பரத்திற்காகவோ அல்லது உங்களை தொந்தரவு செய்யவோ அல்ல. இந்த விஷயத்தை நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, அது உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். அடுத்த 8 மணி நேரத்திற்குள் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் உள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட பாலிவுட் பிரபலங்கள், தங்களுக்கு வந்த மின்னஞ்சல் மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, மின்னஞ்சலின் ஐபி முகவரியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.