கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இதில் 241 பயணிகள் உயிரிழந்ததுடன், அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு, மொத்தமாக 260 பேர் உயிரிழந்தனர். இது இந்தியாவின் விமான வரலாற்றிலேயே மிக பெரிய பேரவலியாக பதிவானது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில், விசாரணை அதிகாரிகள் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், விமானத்தின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்தது. அனைத்து விமான நிறுவனங்களும் தங்களிடம் உள்ள போயிங் 787 விமானங்களின் சுவிட்சுகளை விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த ஆய்வு பணிகள் ஜூலை 21க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதன்பேரில், ஏர் இந்தியா நிறுவனம், தங்களிடம் உள்ள போயிங் 787 விமானங்களில் தொழில்நுட்ப குழுவினர் மூலம் விரிவான ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், எரிபொருள் சுவிட்சுகளில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை என்றும், அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல், கடந்த விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி நிலைக்கு ஒரு அளவுக்குத் தெளிவூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஆறுதலாக அமையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் எதிர்கால விமான பாதுகாப்பில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.