நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கிணங்க எப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்படாவிட்டாலும் முன்ஜாமீன் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டு ராதிகா அகர்வால் என்பவர், ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று தனது தீர்ப்பை வெளியிட்டது.
நீதிமன்ற தீர்ப்பில், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNS) சட்டங்களில் முன்ஜாமீன் பெறும் உரிமை, சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் வரும் நபர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதற்காக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கைதை எதிர்கொள்ளும் நபர்கள் எப்போதும் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் கோரலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வர்த்தகத்துறையினருக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், பலர் ஜிஎஸ்டி மற்றும் சுங்க வழக்குகளில் திடீர் நடவடிக்கைகளுக்கு ஆளாகி, பாதுகாப்பு இல்லாமல் முடங்கிவிடுகின்றனர். இந்த புதிய தீர்ப்பு, அவர்களுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.