திருமலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையான் பெயர் சூட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மத்திய அரசுக்கு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அவசர அறங்காவலர் குழு கூட்டம் பி.ஆர். நாயுடு தலைமையில் நடைபெற்றது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு, அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

திருப்பதி விமான நிலையத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வர சர்வ தேசா விமான நிலையம் என்று பெயர் மாற்ற மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரின் வேண்டுகோளின்படி, பெங்களூருவில் உள்ள தேவஸ்தானத்தின் தற்போதைய ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விரிவுபடுத்தப்பட்டு பெரிய கோயிலாக கட்டப்படும்.
திருப்பதி தேவஸ்தானங்களுக்கு 100 மின்சார பேருந்துகளை வழங்குவதாக மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதியளித்துள்ளார். அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும். தண்ணீர், நெய் மற்றும் உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க மத்திய அரசின் CSIR சோதனை மையம் விரைவில் திருப்பதியில் அமைக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.