பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயார் ஹிரா பெனை இழிவுபடுத்தும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அரசியல் சர்ச்சை தீவிரமாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, பீஹாரில் நடைபெற்ற கூட்டத்தில், மர்ம நபர் ஒருவர் மோடியின் தாயை குறைத்து பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதற்கு பின்னர் தற்போது வெளியான போலி வீடியோவில், மோடியின் சாயலில் நடித்த நபர் “இன்றைய ஓட்டுத் திருட்டு முடிந்துவிட்டது; நிம்மதியாக தூங்கலாம்” என கூறி படுக்கையில் உறங்குகிறார். பின்னர் கனவில், ஹிரா பெனின் உருவத்தில் தோன்றும் பெண், “என் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துகிறாயா? இவ்வளவு கீழே விழ தயாராகிவிட்டாயா?” என கண்டிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பீஹார் காங்கிரஸ் உருவாக்கியதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. “முன்னதாக பிரதமரின் தாயை இழிவுபடுத்தினர், இப்போது அவரையும் பிரதமரையும் அவமதிக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் தரம் தாழ்ந்து செயல்படுகிறது” என்று பா.ஜ., சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ், “இந்த வீடியோ எங்கள் கட்சியுடன் தொடர்பு இல்லை. யார் வெளியிட்டனர் என்பதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “பிரதமர் அரசியலில் உள்ளவர்; எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை விமர்சனங்களையும் சமாளிக்க வேண்டும். இதை அனுதாபமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார்.