டெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் உள்ள கனோரியில் 50 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது. இதனிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாயிகள் சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள பாஜக அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் முன்பு டிராக்டர்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.