ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் மேற்கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 6 முதல் 8 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இன்று தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகே உள்ள எஸ்எல்பிசி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. 14-வது கிலோமீட்டரில் சுரங்கப்பாதையின் இடதுபுறத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்தபோது ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.” சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுரங்கப் பணி, நான்கு நாட்களுக்கு முன் தான் மீண்டும் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி கவலை தெரிவித்தார். எஸ்.எல்.பி.சி சுரங்கப்பாதை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் காயமடைந்த செய்தியை அறிந்த முதல்வர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் விரைந்து வந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.உத்தம் குமார் மற்றும் அவரது துறை அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்த மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, உள்ளே சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.