புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) ஒரே கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகிறது.
முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்கள் மற்றும் இந்த எல்லை வழியாக வந்தவர்கள் மே 1-ம் தேதிக்கு முன் திரும்ப வேண்டும். சார்க் விசா தள்ளுபடி திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னதாக பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. சிறப்பு விசா மூலம் தற்போது இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உட்பட ஐந்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 24-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது திருத்தப்பட்டுள்ளபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் தங்கள் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் கூடிய விரைவில் இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக மத்திய அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.