ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாநிலங்களவையில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் இதை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் கட்டாயம், தூண்டுதல், மோசடி மற்றும் திருமணம் மூலம் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களை தடை செய்கிறது.
இத்தகைய மதமாற்றங்கள் கைது செய்யக்கூடிய மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குற்றவாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவின்படி தாமாக முன்வந்து மதம் மாற விரும்புவோர் 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மதமாற்றம் முற்றிலும் திருமணத்துக்காக நடந்தது என்பது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய திருமணங்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். இந்த மசோதா குறித்து அரசு தரப்பில், “மத சுதந்திரத்திற்கான தனிமனித உரிமையை, மதம் மாறுவதற்கான கூட்டு உரிமையாக யாராலும் மாற்ற முடியாது. மதமாற்றத் தடைச் சட்டத்தை ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு மீறியது கண்டறியப்பட்டால், அதன் பதிவு ரத்து செய்யப்படும்” என்றார்.