திருவனந்தபுரம்: கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதற்காக தெரியுங்களா?
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (14-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 16-ந் தேதி வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.