திருவனந்தபுரம்: நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் 2025-2026-ம் நிதியாண்டுக்கான கேரள பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:- வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில வரி 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.
மின்சார வாகனங்களுக்கான வரி மற்றும் நீதிமன்ற கட்டணங்கள் அதிகரிக்கப்படும். சபரிமலையில் ரூ.1033.62 கோடிக்கான மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சபரிமலை சன்னிதானம் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.778.17 கோடியும், பம்பை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.207.48 கோடியும், பம்பை முதல் சன்னிதானம் வரையிலான நடைபாதை பணிக்கு ரூ.47.97 கோடியும் ஒதுக்கப்படும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஆனால், இவர்களுக்கு கல்வி உதவி வழங்க இந்த பட்ஜெட்டில் ரூ. 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.