புதுச்சேரி: ஆதி திராவிடர் தொழில் மற்றும் தொழில் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி எஸ்.சி./எஸ்.டி. பொருளாதார விடுதலை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் அவர் பேசியது:- ‘ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்தின் வாழ்க்கையில் இன்று பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இன்று உலகை வழிநடத்தி வருகின்றனர். கல்வியின் விளைவாக, வேலை வாய்ப்புகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் கூட இந்நிலைமையை நாம் காணலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் தொழில் முதலீட்டாளர்களாகவும், தொழில்முனைவோராகவும் உயர்ந்து வருகிறார்கள் என்றால் அது மிகக் குறைவு என்றே சொல்லலாம். அதே சமயம் அவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
எந்தவொரு சமூகமும் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டுமே நிலையான வளர்ச்சியை நோக்கி நகர முடியும். ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டுமானால், அதில் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் தொழில் துறையில் முன்னோடிகளாக – வெற்றியாளர்களாக மாறும்போதுதான் அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
உண்மையான வளர்ச்சி என்பது சமூகத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியாகும் – முழுமையான வளர்ச்சி. இதன் அடிப்படையில்தான் மத்திய, மாநில அரசுகள் பயணிக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து தொழில் வளர்ச்சித் திட்டங்களும் பொதுவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சென்றடையவில்லை என்பதை ஒரு குறையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். சிஐஐ, FICCI, சேம்பர் ஆப் காமர்ஸ் போன்ற அமைப்புகளில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு தனி பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
வங்கிக் கடன் திட்டங்கள் மூலம், பண முதலைகளின் கடன் சுமையைத் தவிர்க்க தொழில்முனைவோருக்கு வழி கிடைத்துள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சதவீத கடனை எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு விதித்துள்ளது.