திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அந்தமான் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவகால காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோழி, வாத்து போன்றவற்றில் நோய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேரளாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு கேரள சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டம் முன்னியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார்.
இது ஒரு அரிய மூளை தொற்று. அசுத்தமான குளத்தில் குளித்ததால் அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி இதே வகை அமீபாவால் உயிரிழந்தார். இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனும் இதே அமீபா நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கோழிக்கோடு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.