சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதால், தெற்கு ஆந்திராவில் மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 360 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.17) வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட உள் தமிழகத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்யும்.
தென்கிழக்கு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மற்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இன்று கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் கடல் சீற்றமாக இருக்கும். இதுபோன்ற நிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நாளை மதியம் வரை நீடிக்கும். பின்னர் கடல் மட்டம் படிப்படியாக குறையும்.
நாளை வரை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மாற்றத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. சில பகுதிகளில் பல மணி நேரம் மழை இல்லை. இதற்கிடையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பிரகாசம் மாவட்டத்தில் 101 கர்ப்பிணிகள் பாதுகாப்பு கருதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதையடுத்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் உட்பட பலர் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.