புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாந்தி பாத், நௌரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங்ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்லியின் முக்கிய பகுதிகளில் பீக் ஹவர் மற்றும் மழை நீர் தேங்குவதால், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் அலுவலகம் செல்வோர் உட்பட பலர் சிரமத்துக்குள்ளாகின்றனர். தில்லியில் வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி வரை கணிசமான மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டெல்லியின் சப்தர்ஜங்கில் மட்டும் காலை 8:30 மணியளவில் 39 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 89.5 மிமீ மழையும், இக்னோவில் 34.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.
புதுடெல்லி மற்றும் தெற்கு டெல்லியிலும் கனமழை பெய்து வருகிறது. ஜாகிரா அண்டர்பாஸ், ஆசாத்பூர் சுரங்கப்பாதை, மின்டோ பாலம், அசோக் விஹார் மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய பகுதிகள் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஜூலை 28 (சனிக்கிழமை) வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.