வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், “ஸ்ரீவாரி மேட்டு’ பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகளை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். முன்னெச்சரிக்கையாக திருமலையில் உள்ள புனித தலங்களுக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ஹைதராபாத்தில் இருந்து வந்த “இண்டிகோ” விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
மழை காரணமாக, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன, மற்றவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடாவில் பெய்த கனமழையால் பெண்கள் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்தன.
இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி அதிகாலை 4.30 மணியளவில் கரையை கடந்தது. தற்போது, தென் ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.