திருவனந்தபுரம்: சிறுமி மற்றும் பெண் காணாமல் போனால் உடனடி விசாரணை அவசியம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர் கோடு பைவளிக்கே பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவர் அதே பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவருடன் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் 25 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களது மகளைப்பற்றி எந்த தகவலும் தெரியாததால், மாணவியின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாயமான சிறுமியை கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில் சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். மாயமான இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் தேடினர். மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் டிரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட் போலீசாருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-
மைனர் பெண் மற்றும் பெண் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். புகாரின் செல்லுபடி தன்மையை முதல் கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை. மைனர் குழந்தைகள் காணாமல் போனதாக கேள்விப்படும் போது, விசாரணை அதிகாரியின் மனதில் போக்சோ பிரிவு இருக்க வேண்டும்.
பைவளிக்கேயில் காணாமல் போன சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணையை தவறாக கூற முடியாது. அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கும் ஒரு குறிப்பாணையை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும்.
‘கோவிட்’ காலத்திற்கு பிறகு உலகம் நிறைய மாறி விட்டது. குழந்தைகள் பல தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஊடகங்கள் மற்றும் சினிமாவை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. இணையத்தை தணிக்கை செய்வது சாத்தியமில்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.