பீகாரில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து, இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் குறித்து மீண்டும் விவாதங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. பெரும்பாலானவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை போதுமானதாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இவை அனைத்தும் அடையாளம் அல்லது வசிப்பிடத்துக்கான ஆவணங்கள் மட்டுமே. குடியுரிமையை நிரூபிக்க இவை தனியாகவே போதுமானதல்ல என்பது சட்டப்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியுரிமைக்கு சரியான ஆதாரமாக பாஸ்போர்ட் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது வெளிவருவதே இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதால், இது ஒரு நம்பத்தகுந்த ஆவணமாக மதிக்கப்படுகிறது. அதேபோல், தேசியச் சான்றிதழும் முக்கியமானது. இது மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் அல்லது உள்துறை அமைச்சகத்தால் சிறப்பு தேவைகளுக்கு வழங்கப்படும். அரசு வேலை, கல்வி ஒதுக்கீடு மற்றும் சட்டநடவடிக்கைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவை மிகவும் அரிதாகவே வழங்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் இதைப் பெறுவது சிரமமான செயல்முறையாகவே உள்ளது.
வெளிநாட்டு குடிமக்கள் இந்திய குடியுரிமை பெறும் போது, இயல்புமயமாக்கல் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ் என்பது அவசியமாகிறது. இவை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வழங்கப்படுகின்றன. பிறப்புச் சான்றிதழும் குடியுரிமையை நேரடியாக உறுதிப்படுத்தாது; பெற்றோர் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்கும் பிற ஆவணங்களுடன் இணைக்கப்பட்டாலே அது சட்டபூர்வ ஆதாரமாக அமையும். அதே சமயம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை அடையாள அடிப்படையில் மட்டுமே ஏற்கப்படுகின்றன.
இந்திய குடியுரிமை, 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவுகள் மற்றும் திருத்தங்கள் அடிப்படையில் பிறப்பு, பரம்பரை, பதிவு, இயல்புமயமாக்கல், பிரதேச இணைப்பு ஆகியவையின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, எந்த ஆவணங்கள் உண்மையான குடியுரிமையை நிரூபிக்கின்றன என்பது பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். தவறான புரிதல்களால் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களுக்கு முகமிட வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதால், சரியான ஆவணங்களை வைத்திருப்பதே பாதுகாப்பான நடைமுறையாகும்.