திருவனந்தபுரம்: கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- 2023-ம் ஆண்டில், கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைப் பதிவு செய்யவும், அதற்கான காரணங்களை அடையாளம் காணவும் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் பாதிப்பு 2024 முதல் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை, 104 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அமீபா தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து தொற்று பரவாமல் தடுக்க ‘ஒரு சுகாதாரம்’ திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது கேரளாவில் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் வீணா கூறினார்.