மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அகவிலைப்படியை 53% லிருந்து 55% ஆக உயர்த்தும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
இது சுருக்கமாக DA என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும். அதாவது, நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி சீரமைக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக அதிகமாக இருந்த நிலையில் நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.பின்னர், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படி, நிலுவைத் தொகையுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு நாடு முழுவதும் உள்ள 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உட்பட 1 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். மேலும், தற்போது அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18 ஆயிரமும், கூடுதல் அகவிலைப்படியாக மாதம் ரூ. 360. ஒரு வருடத்தில் ரூ.4,320 வரை கிடைக்கும். மேலும், ஓய்வூதியர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் என்றால் ரூ. 9 ஆயிரமும், அவர்களுக்கு மாதம் ரூ. 180 அதிகரிக்கும்.
இதன் மூலம் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,160 வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரூ.22,919 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் அல்லாத எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், “காரிஃப் பருவத்தில் பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.