சபரிமலைக்கு மண்டல காலம் முடிந்து டிசம்பர் 26 அன்று நடை அடைக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 30 அன்று மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கியது. இதற்குப் பிறகு பக்தர்கள் பெரும்பிரளயம் போல வந்துகொண்டிருக்கின்றனர்.பக்தர்கள் வருகையால் காட்டுப்பாதைகளில் வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் ரத்து செய்யப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்ததாவது, இந்த மண்டல காலத்தில் 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இது கடந்த ஆண்டின் 28.42 லட்சம் பக்தர்களைக் காட்டிலும் 4 லட்சம் அதிகமாகும்.ஸ்பாட் புக்கிங் மூலம் 5.66 லட்சம் பேர் சன்னிதானத்துக்கு வந்தனர்.
கடந்த ஆண்டில் இதற்கான எண்ணிக்கை 4.20 லட்சம் மட்டுமே. இதேபோல, புல் மேடு வழியாக 74,874 பேர் வந்தனர்.41 நாட்கள் நீடித்த மண்டல காலத்தில் ரூ.297 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டின் வருமானம் ரூ.214.82 கோடியாக இருந்தது.
இதில், அரவணை விற்பனையில் ரூ.124 கோடியும், காணிக்கையாக ரூ.80.25 கோடியும் வந்துள்ளது.இந்த வருவாயை தேவசம்போர்டு நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் என்று பல பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.