புதுடெல்லி: லோக்சபாவில் பேசிய ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகந்த் துபே, “வங்கதேசம் சுதந்திரம் பெற்றது இன்றே. இதற்கான போரில், ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்களை, இந்திய ராணுவம் சிறைபிடித்தது. அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தானால் ஜனநாயகம் அழிக்கப்பட்டது. இந்தியா அதை மீட்டெடுத்தது.” அப்போது அவர் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “நாடு இன்று வெற்றி தினத்தை கொண்டாடுகிறது. இந்த வெற்றியில் இந்தியாவை வழிநடத்திய ராணுவ வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்திய மக்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது.
இந்தியா போராடிய போது அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு நாட்டு மக்கள் ஆதரவாக நின்றார்கள். “அந்த நாள் ஜனநாயகத்துக்கான போராட்டம். இப்போது, இந்துக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, இந்திய அரசால் அதற்கு எதிராக குரல் எழுப்பவோ, வங்கதேச அரசிடம் பேசவோ முடியவில்லை,” என்று அவர் குற்றம் சாட்டினார். பிரியங்காவின் குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, பிரியங்காவின் பேச்சுக்கு இடையூறு விளைவிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “வங்கதேசத்தில் சிறுபான்மையினர், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு எதிராக இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும். வங்கதேச அரசிடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எங்கள் அரசு நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, “இன்று வங்கதேச சுதந்திர தினம். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நம் நாட்டை காப்பாற்றினார். அவர் ஒரு இரும்பு பெண்மணி. ஒருவேளை அவர் பாஜக தலைவர்களை ஊக்கப்படுத்தியிருக்கலாம். அங்குள்ள சிறுபான்மையினருக்கு உதவ வேண்டும்.”