இந்துாரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியா வேகமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார். மத்திய பிரதேச அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுதிய பரிக்ரமா கிருபா சார் என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டார். நர்மதை நதியைப் பற்றிய இந்த நூல் வெளியீட்டில் பங்கேற்ற அவர், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து விரிவாக பேசினார்.

அவரது உரையில், அனைவரின் கணிப்புகளையும் தவறாக நிரூபிக்கும் வகையில் இந்தியா முன்னேற்றம் காண்கிறது எனக் கூறினார். உலகில் பல பிரச்னைகள் சுயநலத்தின் காரணமாக உருவாகின்றன. ஆனால் நமது நாட்டின் ஞானம், செயல், பக்தி அடங்கிய பாரம்பரிய தத்துவங்களே இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்துகின்றன என அவர் வலியுறுத்தினார்.
சுதந்திரம் பெற்றதும் இந்தியா சிதறி போகும் என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கணித்திருந்தார். ஆனால் அந்த கணிப்பு முற்றிலும் தவறானது என்பதை இன்று நிரூபித்துள்ளோம். மாறாக, சர்ச்சிலின் சொற்கள் தற்போதைய பிரிட்டனுக்குப் பொருந்துகின்றன என பகவத் சுட்டிக்காட்டினார்.
இந்தியா பல துறைகளில் முன்னேற்றம் காண்கிறது என்பதை வலியுறுத்திய அவர், நாட்டின் வளர்ச்சி பாதை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இதற்கான காரணம் நமது பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மக்களின் ஒன்றுபட்ட முயற்சிகளே என்றும் குறிப்பிட்டார்.