புதுடில்லி: இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் ரூ.30,015 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது ரூ.28,000 கோடி மட்டுமே இருந்தது. ரஷ்யாவுடன் தொடரும் இந்த வணிகம், அமெரிக்காவின் எச்சரிக்கை மற்றும் அதிக வரி மிரட்டலையும் மீறி நடைபெற்றுள்ளது.
உக்ரைன் போருக்கான நிதி ஆதரவாக இந்தியா செயல்படுகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்காக இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டது. ஆனால், சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்ய எண்ணெயை வாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கூறி, இந்தியா தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.

இந்தியா, கச்சா எண்ணெய் மட்டுமின்றி, நிலக்கரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளையும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. மறுபுறம், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இடைவெளி குறைந்து வருவதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. இதனால் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம் அதிகரிக்கும் நிலையில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியா தனது நலனுக்காக எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.