புதுடில்லி: இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது, ரூ 858 கோடி மதிப்பிலான, இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது, நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் 858 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
அதன் படி முதலாவதாக இந்திய ராணுவத்திற்காக துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைக் கொள்முதல் செய்ய ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ 445 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த துங்குஸ்கா ஏவுகணை அமைப்பானது, விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் வான் பாதுகாப்பு வலையமைப்பை கணிசமாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக போயிங் இந்தியா டிஃபென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ 413 கோடி ரூபாய் மதிப்பில் மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியக் கடற்படையால் பயன்படுத்தப்படும் பி-8ஐ கடல்சார் உளவு விமானங்களின் பரிசோதனை மற்றும் பராமரிப்புப் பணிகளை உள்நாட்டிலேயே மேற்கொள்ள வழிவகுக்கும். இதன் மூலம் பி-8ஐ விமானங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) போன்றவற்றை உள் நாட்டிலேயே உறுதிசெய்து, வெளிநாட்டு வசதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் கூறப்படுகிறது.
புது டெல்லியில் உள்ள கர்த்தவ்யா பவனில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.