புதுடில்லி: அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும், முக்கியமாக பால் பண்ணை மற்றும் வேளாண்மை பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்க வேளாண்மை மற்றும் கால்நடைத் துறைப் பொருட்களுக்கு தனது சந்தையை முழுமையாகத் திறக்க மறுத்து வருகிறது.

இதனால், 6வது சுற்று பேச்சுவார்த்தை தள்ளிப் போனது. அதற்கு மேலாக, அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்தது உறவுகளை சற்றே பதட்டப்படுத்தியது.
இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற வர்த்தக சேம்பர் நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் கூறியதாவது:
“இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் புவிசார் அரசியல் சிறிதளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். பிப்ரவரியில் இரு நாடுகளின் தலைவர்களும் எடுத்த முடிவின்படி, வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
அவர் மேலும், இந்தியா உலகின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தி வருவதாகவும், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் தெரிவித்தார்.