புதுடில்லி: உறுதுணையாக இந்தியா இருக்கும்… கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
மியான்மர்-தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.
இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து இன்று ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் உள்ளன.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டின் நிலவரம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மியான்மர் ராணுவத்தின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் பேசியது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என உறுதி அளித்துள்ளேன். நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட செய்தியை பகிர்ந்த பிரதமர் மோடி, விரைவில் மீட்புக்குழுக்கள் மியான்மருக்கு அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளார்.
ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்தியா நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளது.