இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாமை பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வரும் உல்பா (ULFA-I) பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாரேஷ் பருவா தலைமையில் செயல்படும் குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக மியான்மர் எல்லைக்கு அருகே பதுங்கி இருந்துவருகிறார்கள். இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு, பெரும்பாலும் அசாம் மற்றும் அதை ஒட்டியுள்ள மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில், நாகலாந்தின் லோங்வா முதல் அருணாச்சலத்தின் பங்சாய் கணவாய் வரையிலான இடங்களில் அமைந்துள்ள தங்களது முகாம்கள் மீது இந்திய ராணுவம் 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் பிரான்சில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை தொடர்ந்து வந்ததாகவும், இதில் முக்கிய தளபதி நயன் மெதி என்ற நயன் அசோம் உயிரிழந்ததாகவும், மேலும் 19 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தாக்குதல் தொடர்ந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் முற்றிலும் மறுப்பை தெரிவித்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ராணுவ வட்டார செய்தி அதிகாரி ஒருவர், “இந்த தாக்குதலுக்கு எந்த ஆதாரமான தகவலும் எங்களிடம் இல்லை,” என்று தெரிவித்துள்ளார். மேலும் நாகலாந்து ராணுவத்திலும் இதுதொடர்பான சான்றுகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்களை வைத்து பார்க்கும்போது, இது உண்மையில் நிகழ்ந்ததா அல்லது உல்பா அமைப்பின் உள்நிலை பிரச்சனைகளை மறைக்கும் ஒரு உள்நோக்கமுடைய அறிக்கையா என்பது குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு துறைகள் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றன.