அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகளவில் வர்த்தக சமநிலையை ஏற்படுத்தும் வகையில் “Reciprocal Tariff” எனும் புதிய வரிமுறையை அமல்படுத்த முடிவெடுத்துள்ளார். இதன் அடிப்படையில், எந்த நாடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறதோ, அதே நாடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவும் அதே அளவிலான வரியை விதிக்கும். இந்த முடிவு இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க இருக்கின்ற நிலையிலேயே இந்த முக்கியமான அறிவிப்பு வெளியானது. இந்தியாவிற்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் பலவகையாக உள்ளன. உணவுப் பொருட்கள், ஆடைகள், மின் உபகரணங்கள், ரத்தினக் கற்கள், நகைகள், மருந்துகள், இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற முக்கிய பொருட்கள் இதில் அடங்கும்.
இந்த புதிய வரிமுறை அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் அமெரிக்க நுகர்வோர் இந்திய பொருட்களை வாங்காமல், குறைந்த விலையிலான பிற substitute பொருட்களை தேர்வு செய்யலாம். இதனால் இந்திய ஏற்றுமதி குறையும், இந்திய உற்பத்தியாளர்களின் வருவாய் பாதிக்கப்படும். குறிப்பாக, ஏற்றுமதியாளர்கள் வருமான இழப்பு அடைந்தால், பல தொழிலாளர்கள் வேலையிழப்பில் சிக்குவார்கள்.
இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் குறைந்த வரி விதிப்புடன் இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக, இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 9.5% வரி விதிக்கிறது, ஆனால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு வெறும் 3% மட்டுமே வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதை சமன் செய்ய, இந்தியா தனது வரியை குறைக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிற்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை குறைக்க, இந்திய அரசு ஏற்கனவே சில முக்கிய முடிவுகளை பரிசீலித்து வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைப்பது பற்றியும், எரிசக்தி பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கிறது.
மேலும், ட்ரம்ப் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு மாற்று தீர்வையும் வழங்கியுள்ளார். இந்தியாவில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்வதை தவிர்த்து, அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்து தயாரிப்பு செய்யலாம் என அவர் கூறியுள்ளார். இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதே அவரின் நோக்கம். ஆனால், இது இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கலாம்.
இந்த புதிய வரிமுறை அமலுக்கு வந்தால், இந்திய பொருளாதாரம் பெரிய தாக்கம் அடைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி குறைந்தால், தொழில் மற்றும் வணிகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில், அமெரிக்க நுகர்வோர் இந்திய பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையும் உருவாகும்.
தற்போது, இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த Reciprocal Tariff இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை எப்படி மாற்றும் என்பதற்காக தொழில்சார்ந்த வல்லுநர்கள் தீவிரமாக கணிக்கின்றனர்.