புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இராஜதந்திர முயற்சியின் விளைவாக 2014-ம் ஆண்டு முதல் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 2014-ம் ஆண்டு முதல், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் உயர்மட்ட தலையீடுகள் மூலம், 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்புவதை உறுதி செய்துள்ளனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500 இந்திய கைதிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் இந்த முடிவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையே உள்ள நெருக்கமான இராஜதந்திர உறவுகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றிகரமான முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய இராஜதந்திர அந்தஸ்தையும், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களைப் பாதுகாப்பதில் மோடி அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.

பிரதமர் மோடி அரசின் இராஜதந்திர முயற்சியால் இந்திய குடிமக்கள் விடுதலையில் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:- 2022-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 2,783 இந்திய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 2019-ம் ஆண்டு இந்தியா வந்தபோது 850 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார். இந்திய கடற்படை வீரர்கள் 2023-ல் கத்தாரில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஈரான் அரசாங்கம் 2024-ல் 77 இந்தியர்களையும், 2023-ல் 12 மீனவர்கள் உட்பட 43 இந்தியர்களையும் விடுவித்தது.
2019-ல் பிரதமர் மோடியின் வருகையின் போது 250 இந்தியர்களுக்கு பஹ்ரைன் மன்னிப்பு வழங்கியது. 2017-ல் குவைத் எமிர் 22 இந்தியர்களை விடுவித்தார். 97-ன் தண்டனையை குறைத்தார். மத்திய அரசின் தொடர் முயற்சியால், 2014-ம் ஆண்டு முதல், 3,697 இந்திய மீனவர்களை, இலங்கை அரசு விடுவித்துள்ளது. அதேபோல், 2014-ம் ஆண்டு முதல், 2,638 இந்திய மீனவர்களையும், 71 இந்திய கைதிகளையும், பாகிஸ்தான் விடுவித்துள்ளது.