டெல்லி: இந்தியாவில் ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் என்ற அந்தஸ்தை பாமாயில் வேகமாக இழந்து வருகிறது. அந்த இடத்தை சோயாபீன் நிறுவனங்கள் கைப்பற்றி வருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த மாதம் 2,75,241 டன்னாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஜனவரியில் செய்யப்பட்ட இறக்குமதியை விட 65 சதவீதம் குறைவாகும். 13 வருடங்களில் ஒரு மாதத்தில் இவ்வளவு குறைந்த இறக்குமதி பதிவானது இதுவே முதல் முறை.
பாமாயில் பல ஆண்டுகளாக இந்தியாவில் மிகவும் பிரபலமான சமையல் எண்ணெய். ஆனால், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பாமாயில் விற்பனை சரிந்து தற்போது சோயாபீன் ஆயில் இடம் பிடித்துள்ளதாக இந்திய சமையல் எண்ணெய் ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2024 ஜனவரியில் 188,859 டன் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ஜனவரியில் மட்டும் 444,026 டன்னாக அதிகரித்துள்ளது. பாமாயில் பெரும்பாலும் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சோயாபீன் எண்ணெய் பெரும்பாலும் ஆர்ஜென்டினா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிலிருந்து வாங்கப்படுகிறது. சோயாபீன் எண்ணெய்க்கு அதிக தேவை இல்லை என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். உலக அளவில் சமையல் எண்ணெய் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தாலும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.