புதுச்சேரி: இண்டிகோ தனது விமானங்களை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு டிசம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது. பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் செல்லும் விமானங்களை கடந்த மார்ச் 30-ம் தேதி நிறுத்தியது.
இதனால் கடந்த 7 மாதங்களாக புதுச்சேரியில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி அக்டோபர் 27-ம் தேதி முதல் இண்டிகோ விமானம் இயக்கப்பட இருந்தது.
ஆனால் எதிர்பாராத காரணங்களால் தாமதமானது. இந்நிலையில், டிசம்பர் 20-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு ஏடிஆர் 72 விமான சேவை டிசம்பர் 20-ம் தேதி தொடங்கும். பெங்களூரில் இருந்து தினமும் காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். பின்னர் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.
அதேபோல் ஹைதராபாத்தில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படும் விமானம் 4.30 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறது. பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று கூறினார்.