நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியது. பிரதமர் மோடி இந்த இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிட்டார். இந்த இடத்தில் பகலில் 82 டிகிரி செல்சியஸாகவும், இரவில் மைனஸ் 170 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். விக்ரம் லேண்டரில் நிலவின் தென் துருவப் பகுதியின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழம் வரை உள்ள பகுதியில் வெப்பநிலையை அளவிட ‘CHEST’ (Lunar Surface Thermophysical Experiment) என்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது.
இது 10 தனித்துவமான வெப்பநிலை உணரிகளைக் கொண்டுள்ளது. இது குறித்து அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் துர்கா பிரசாத் கரணம் கூறியதாவது:- சந்திரயான்-3 விண்கல ஆய்வுகளின் தரவுகள் நிலவின் துருவப் பகுதிக்கு கீழே பல இடங்களில் பனிக்கட்டிகள் இருக்கலாம் என்று கூறுகின்றன. நிலவில் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக பனிக்கட்டிகள் உருவாகலாம்.

இந்த பனிக்கட்டிகளை படிப்பதன் மூலம், அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை அறிய முடியும். நிலவின் தென் துருவப் பகுதியில், சூரிய ஒளி படாத இடங்களில் குளிர்ச்சியான வெப்பநிலை நிலவுவதால், பனிப் படலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. நிலவின் மேற்பரப்பில் அதிக வெற்றிடத்தின் காரணமாக, பனி இங்கு நீராக மாற முடியாது, ஆனால் நீராவியாக மாறும்.
எனவே, சந்திரனுக்கு உயிர் வாழக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. இருப்பினும், நிலவில் வாழும் உயிரினங்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய பனி ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கு, பனிக்கட்டியைப் பிரித்தெடுத்து பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் உத்திகளும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு துர்கா பிரசாத் கரணம் கூறினார்.