கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைக்கு நேற்று வினாடிக்கு 2241 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3856 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
நேற்று வினாடிக்கு 6000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிரடியாக அதிகரித்து 16,977 கனஅடியாக உள்ளது. இதனால் கபினி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.