புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராகவும், விண்வெளி துறை செயலாளராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் முறைப்படி ஜனவரி 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை பதவியில் இருப்பார் என அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) அறிவித்துள்ளது. நியமனக் குழு என்பது இந்திய அரசின் உயர்மட்டக் குழுவாகும், இது மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமான பதவிகளுக்கு மூத்த அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பாகும்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.நாராயணன். 1984-ல் இஸ்ரோவில் இணைந்த வி.நாராயணன், ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 14-ம் தேதி முதல் இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ளார்.