புதுடில்லி: விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம், 50,000 கோடி ரூபாய் வரை, சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்க இயக்குனரகம் விசாரணையை துவக்கியுள்ளது.
சில நிறுவனங்கள் விலையுயர்ந்த தளபாடங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்யும் போது மதிப்பை குறைவாக அறிவித்து வருவதாக நிதி அமைச்சக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதி மதிப்பை, சீன விற்பனையாளர்கள் மூலம் இறக்குமதி நிறுவனங்கள் நாட்டுக்கு அனுப்பியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், கடந்த ஆறு மாதங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, இவ்வாறு சீனாவுக்கு கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தொடங்கியுள்ள விசாரணையை மத்திய நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணம் மற்றும் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் இதுபோன்ற ஹவாலா மோசடி நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது. இதனை தடுக்க சீன இறக்குமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, நாட்டின் பொருளாதார பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.