ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க வன்முறைச் செயலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த நமது சகோதரர்கள் உட்பட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோழைத்தனமான, வெறுக்கத்தக்க வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். இதற்கான அனைத்து அடிப்படைப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு படையினருடனான முக்கிய சந்திப்பில் பங்கேற்பதற்காக ஸ்ரீநகர் சென்றுள்ளார்.
ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு: அனந்த்நாக் காவல்துறை சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 ஆகியவற்றை அணுகலாம்.