ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக சட்டசபையில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “இந்தக் கூட்டத்தொடர் சட்டமன்றத்தின் சம்பிரதாயம் மட்டுமல்ல, நல்ல நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்று முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாகும். இந்த லட்சியத்தை நிறைவேற்ற எனது அரசு உறுதிபூண்டுள்ளது. உணர்வு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த விருப்பங்களில் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. செயல்முறையை எளிதாக்குவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 7 ஆண்டுகளில் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டாகும் இந்த பட்ஜெட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட மக்களின் சக்தியை பிரதிபலிக்கிறது,” இவ்வாறு அவர் கூறினார்.