ராஞ்சி: முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் மாநிலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டாவின் சிலைக்கு சிவராஜ் சிங் சவுகான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஜார்கண்ட் மாநிலத்தை வாஜ்பாய் உருவாக்கி, பிரதமர் மோடி வளர்த்ததை அனைவரும் பார்த்திருக்கிறோம். இப்போது ஹேமந்த் சோரனின் ஆட்சியில், அரசு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சுரங்க மாஃபியா
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) என்பது நில மாஃபியா, கொலை மாஃபியா மற்றும் சுரங்க மாஃபியாவைக் குறிக்கிறது. இங்கு மணல் கிடைக்குமா? ஏழை மக்கள் வீடு கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு 10,625 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 27 ஆயிரத்து 459 கோடி ரயில்வேக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.