டில்லி: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை குறைத்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பா.ஜ. எம்.பி., நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
2020ல் தொடங்கிய டில்லி விவசாயிகள் போராட்டத்தில், பஞ்சாபை சேர்ந்த 73 வயது மஹீந்தர் கவுர் உள்ளிட்ட பெண்கள் பங்கேற்றனர். அவரின் வீடியோவை கங்கனா 2021ல் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “இந்த பெண் 100 ரூபாய்க்காக போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்” என குறிப்பிட்டார். இதை அவதூறாகக் கருதி மஹீந்தர் சிங், பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா தாக்கல் செய்த மனு 2022ல் ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கங்கனாவின் தரப்பில், “அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை, சமூக வலைதளத்தில் தகவலை மட்டுமே பகிர்ந்தார்” என்று வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள், “கங்கனா செய்தியை பகிரவில்லை, தனது கருத்தையும் சேர்த்துள்ளார். வழக்கை தள்ளுபடி செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை, ஹைகோர்ட்டில் சொல்லுங்கள்” என தெரிவித்தனர். பின்னர் கங்கனா மனுவை திரும்பப் பெற சம்மதித்ததால், அதற்கு அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.