பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது 2015-ம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்ப்பு காரணமாக, அதன் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது.
இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை விரைவில் வெளியிட கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்தார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை குறித்து விவாதிக்க சித்தராமையா தலைமையில் நேற்று பெங்களூருவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு (சமூக, பொருளாதார, கல்விக் கணக்கெடுப்பு) அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர், அமைச்சரவையில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அமைச்சர்கள் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், லட்சுமி ஹெபால்கர், எம்.சி. சுதாகர், கே.வெங்கடேஷ், ஆர்.பி.திம்மாபூர், மது பங்காரப்பா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறுகையில், “ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் விவரங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை விவரம் குறித்து விவாதிக்க 17-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.