பெங்களூரு: கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரியின் தரத்தினை பரிசோதித்த போது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பானி பூரியில் செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அம்மாநில உணவுத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் 276 கடைகளில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். இதில், 41 மாதிரிகளில் செயற்கை நிறமிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 18 பானி பூரி மாதிரிகள் (22%) மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என தெரியவந்தது. 52 சதவீத மாதிரிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் சினிவாஸ் கூறும்போது, “எங்களது சோதனைக்கு தெருவோர கடை முதல் நட்சத்திர விடுதி வரையிலான கடைகளில் விற்பனை செய்யப்படும் பானி பூரியின் மாதிரிகளை பயன்படுத்தினோம்.
அதில் நீலம், பச்சை, ஆரஞ்சு போன்ற நிறங்களில் ரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்திருக்கிறோம். மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்ற உணவை ஏன் தடை செய்யக்கூடாது?”என கேள்வி எழுப்பினார்.
கர்நாடக சுகாதார மற்றும் உணவுத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “கர்நாடகாவில் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் வழங்குவதற்கு முழு முன்னுரிமை அளித்து வருகிறோம். செயற்கை நிறமிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களது சமீபத்திய ஆய்வில் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி சில உணவு பொருட்களை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
உணவக உரிமையாளர்கள் பாதுகாப்பான உணவை சுகாதாரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். பொறுப்புடன் செயல்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.