கர்நாடகாவில் இறந்த முஸ்லிம் பெண்ணின் உடன்பிறப்புகளுக்கும், பெண்ணின் கணவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி ஹன்சதே சஞ்சீவ் குமார் விசாரித்து வருகிறார். அவர் கூறியதாவது:- தனிநபர் சட்டங்கள் மற்றும் மதம் தொடர்பாக நமது நாட்டிற்கு ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தேவை.
அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் நோக்கம் நிறைவேறும். அரசியலமைப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள பெண்கள் சமமான குடிமக்களாக இருந்தாலும், மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களால் அவர்கள் சமமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக, இந்து சட்டம் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமை அளிக்கிறது. ஆனால் முஸ்லிம் தனிச்சட்டம் சொத்துப் பங்கீட்டில் சகோதர சகோதரிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுகிறது.

குறிப்பாக, சகோதரிக்கு குறைந்த பங்கை வழங்குகிறது. இந்த பாகுபாட்டை அகற்ற, உத்தரகண்ட் மற்றும் கோவா மாநில அரசுகள் ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளன. இதன் அடிப்படையில் நாடாளுமன்றமும், மாநிலங்களவையும் பொது சிவில் சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், டி.கிருஷ்ணமாச்சாரி மற்றும் மௌலானா ஹஸ்ரத் மொஹானி உள்ளிட்டோர் பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.