புதுடெல்லி: காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு கண்காணிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மைக் குழுவின் 100-வது கூட்டம் தில்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள், வானிலை ஆய்வு மைய வல்லுநர்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.
அப்போது, காவிரி நீர்பிடிப்பு மற்றும் 4 மாநிலங்களில் உள்ள பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர் இருப்பு, வரத்து, மழை அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு கூறுகையில், ”காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூலை மாதம் பெய்த கனமழையால், கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பியுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முறையாக திறந்துவிட வேண்டும்.
இதை ஏற்பாட்டுக் குழு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ஆகஸ்டில் 45 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், “”காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவை விட கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய தண்ணீர் மேலும், தடையின்றி திறக்கப்படும்,” என, தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவிரி மேலாண்மை குழு தலைவர் வினீத் குப்தா, ”தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு முறையாக திறக்க வேண்டும். தமிழக அரசு, புதுச்சேரிக்கு மாதந்தோறும் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும்,” என்றார்.
தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 38 ஆயிரத்து 977 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 55 ஆயிரத்து 659 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 805 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், காவிரி ஆற்றில் வினாடிக்கு 24 ஆயிரத்து 662 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.