மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 1 முதல் 6 வயது குழந்தைகள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பிரேதப்பரிசோதனையில் குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கோல்ட்ரிப் இருமல் சிரப் மருந்தில் டை எத்திலீன் கிளைசால் போன்ற நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
மருந்து மாதிரிகளில் 48.6 சதவீதம் டை எத்திலீன் கிளைசால் இருப்பது அதிகாரிகள் தெரிவித்தனர். இவை பெரும்பாலும் பெயிண்ட், மை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளாகும். குழந்தைகளின் சிறுநீரக செயலிழப்பிற்கு இதனால் நேரடி காரணம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் எனவும், அரசு மருந்து ஆய்வகம் இதனை “தரமற்ற தரம்” என அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி விசாரணை செய்யுமாறு கேட்டுள்ளனர். SR-13 தொகுப்பு எண் கொண்ட 2025 மே மாதத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் 2027 ஏப்ரல் வரை செல்லுபடியாகும் கோல்ட்ரிப் சிரப் மருந்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், கோல்ட்ரிப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தமிழகத்தில் தற்காலிகமாக தடை செய்துள்ளது. மேலும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்க கூடாது என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் பின்னர், CDSCO ஆறு மாநிலங்களில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வைத் தொடங்கியுள்ளது.