புதுடில்லி: காசா பகுதியில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் வெடித்தது. அதன் பின்னர் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், சமீபத்தில் காசாவின் முக்கிய மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்:
“காசாவில் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியூட்டுகிறது. இது மிகுந்த வருத்தத்துக்குரிய சம்பவமாகும். மோதல்களில் பொதுமக்கள் உயிரிழப்புகளை இந்தியா எப்போதும் கண்டித்து வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று அவர் கூறினார்.