திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாறசாலையை சேர்ந்த குமரி கல்லூரி மாணவி ஷாரோன்ராஜ் என்பவரை கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொலை செய்த வழக்கில் களியக்காவிளையை சேர்ந்த கிருஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தூக்கு தண்டனை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் அட்டகுளங்கரை மகளிர் சிறையில் கிரிஷ்மா அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது 4 பேர் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களில் 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர், ஒருவர் போக்சோ கைதி. இந்த ஆண்டின் முதல் கைதி என்பதால், கிரிஷ்மாவுக்கு 1/2025 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. ரிமாண்ட் கைதியாக இருந்த அவர், 11 மாதங்கள் அதே சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சக பெண் கைதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மாவேலிக்கரை சிறைக்கு மாற்றப்பட்டார். முன்பு இந்த சிறையில் இருந்ததால், கிரிஷ்மாவுக்கு இங்குள்ள அனைத்து பகுதிகளும் நன்றாகத் தெரியும். சிறையில் அவரது முக்கிய பொழுதுபோக்கு ஓவியம். கடந்த முறை சிறையில் இருந்தபோதும், பெரும்பாலும் ஓவியம் வரையவே தன் நேரத்தை செலவிட்டார்.
பொதுவாக மரண தண்டனை கைதிகளுக்கு சிறையில் வேலை வழங்கப்படுவதில்லை. அதிகபட்ச தண்டனை கிடைத்தாலும் கிரிஷ்மா எந்த குற்ற உணர்வையும் உணரவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் அவரது பெற்றோர் அவளைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் இருவரும் தங்கள் மகளைப் பார்த்து கதறி அழுதனர். ஆனால், கிரிஷ்மா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.